Cutetamil.net Poems

Cutetamil.net Poems

cute tamil poems

For more poems : http://cutetamil.net

கண்ணுக்குத் தெரியா கடவுள்

OtherzPosted by guest Wednesday, May 16 2007 22:17:53
மண்ணுயிர் காக்கும் கடவுள் எனலாம் நுண்ணுயிரை
வெறும் கண்ணுக்கு புலப்படாததாலும்
அங்குமிங்குமெங்கும் நிறைந்திருப்பதாலும்
காத்தல், அழித்தல் இவ்விரண்டையும் கடனே செய்திருப்பதாலும்!

மண்ணுயிருள் மாண்புமிகு மானிடன் எனலாம் நுண்ணுயிரை
விருந்தினன் போல் மெல்ல நுழைந்து பின்
அடிமை சாசனம் நீட்டுவதாலும்
மற்றொரு உயிரை உறிஞ்சி உடல் வளர்த்து உயிர் வாழ்வதாலும் தன் இனத்தினை கூண்டோடு அழிக்க தானே விஷம் சுரப்பதாலும் அப்பாவி, சந்தர்ப்பவாதி, கொடூர ஆட்கொல்லி எனப்
பல வேடம் பூணுவதாலும்

நித்தம் ஐந்து முறை கை அலம்பும் சுத்தக்காரன் அறியான்
தன்னுடல் கோடானு கோடி நுண்ணுயிர் சுமக்கும்
ஓர் உயிரியல் பூங்கா என்று
முத்தமிட்டு மோகம் கொள்ளும் காதலர்கள் அறியார்
இதயங்களுடன் பாக்டீரியாக்களையும் பரிமாறிக்கொள்கிறோம் என்று

கச்சா எண்ணெய் கழிவு கடலில் கலக்காமல் செரிக்கும்
காகம் கூட தீண்டாத எதனையும் உண்டு மக்கச்செய்யும்
தாவரங்களை பூச்சிகளிடமிருந்து காத்து, நைட்ரஜன் ஊட்டும்
மல்லிகைப்பூ இட்லியும், மதிமயக்கும் மதுவும் அளிக்கும்
மனித இனத்தின் சராசரி ஆயுட்காலத்தை நீட்டித்த
பெனிசில்லின் சுரக்கும் கல் தோன்றி மண் தோன்றா
காலத்தே தோன்றிய மூத்த உயிராம்
நுண்ணுயிரின்றி ஓரணுவும் அசையாது அவனியிலே!
  • Comments(0)//poems.cutetamil.net/#post28

தமிழா தமிழில் பேசு

OtherzPosted by guest Wednesday, May 16 2007 22:14:59
கடல்கடந்து திரவியங்கள் தேட - நீ
கடல்கடந்து செல்வதெல்லாம் சரியே;
உடல்சுமந்து உனையீன்ற தாயை - நீ
உணர்விழந்து மறப்பதுதான் முறையோ?

தாயை மறப்பதுவும் சரியோ? - அன்னை
தமிழை மறப்பதுவுன் நிலையோ?
பேச இனியமொழி தமிழ்தான்! - அதனைப்
பேசிப் பழகிவிடு தமிழா!

அகத்தியனார் தந்தமொழி தமிழாம் - இச்
சகத்தினிலே சிறந்தமொழி அதுவாம்;
அகத்தினிலே தவழவிடு தமிழை! - அதுதரும்
சுகத்தினிலே திளைத்துவிடு தமிழா!

நாட்டில் பலமொழிகள் இருக்கு - அதிலேநம்
தமிழுக்கே தனிப்பெரும் சிறப்பு!
வீட்டில் தமிழ்பேசு தமிழா! - நீ
விரும்பித் தமிழ்பேசு தமிழா!

மூத்த மொழியென்று சொல்வார் - அதனைநம்
வீட்டு மொழியாக்கிக் கொள்வோம்;
மூத்த குடிமக்களோடு நாம்
தமிழில் உரையாடி மகிழ்வோம்!

தமிழை அமுதென்று சொன்னார் - நீ
தமிழைப் படித்துப்பார் புரியும்!
தமிழெங்கள் உயிரென்றும் சொன்னார் - தாசன்
கவிதை படித்துப்பார் தெரியும்!

வார்த்தை வளமிகுந்த தமிழை - நாம்
வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்!
வழக்கம் மாற்றிக்கொண்டால் - சொற்கள்
வழக் கொழிந்து போகும்!
  • Comments(9)//poems.cutetamil.net/#post27

தாலாட்டு

OtherzPosted by guest Wednesday, May 16 2007 22:13:39
பொன்னெடுத்து நிறமெழுதி
பூவெடுத்து மேனிசெதுக்கி
விழியில் கவியெழுதி
விரலில் ஒவியமெழுதி
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாய்
வளரணும் வளரணுமே!
ஆராரரோ! ஆரிராரோ!

அறிவுக்குச் சூரியனாய்
அழகுக்குச் சந்திரனாய்
பொறுமைக்கு பூமியாய்
புகழுக்குப் பிறந்தவளாய்
வறுமைக்கு வள்ளலாய்
வீரத்துக்கு விஜயனாய்
வளரணும் வளரணுமே!
ஆராரரோ! ஆரிராரோ!
  • Comments(1)//poems.cutetamil.net/#post26

சில சமயம்

OtherzPosted by guest Wednesday, May 16 2007 22:13:11
தொலைந்து போன
காகிதங்கள்
மீண்டும் கிடைத்தது போல்
மகிழ்ச்சி!

மனசு வெட்கப் படாமல்
சில சமயம்
தனக்குத் தானே
குளித்து கொள்ளும்..

ரகசியமாய்க் கனவை
அடைகாத்து வைத்து
குஞ்சு பொறிப்பது போல்
சில துளி நிகழ்வுகள்..

தங்காது எனத் தெரிந்தும்
தென்றலை சுகிக்கும் மனம்..

எதைக்
கட்டிப் போட முடியும்..
கட்டுப்படுகிறவை
தானாய் விரும்பாமல்...!
  • Comments(3)//poems.cutetamil.net/#post25